தமிழ்நாடு

விளாத்திகுளத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

Published On 2024-05-27 04:17 GMT   |   Update On 2024-05-27 04:17 GMT
  • நாட்டுப் படகுமூலம் மர்ம நபர்கள் கடத்தலில் ஈடுபடுவதை கண்டறிந்தனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகள் வழியாக இலங்கைக்கு அவ்வப்போது படகுமூலம் பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்க மாவட்ட கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக படகுமூலம் பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ குமார், இசக்கிமுத்து, காவலர் பழனிபாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு வேம்பார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அக்கறை என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் நாட்டுப் படகுமூலம் மர்ம நபர்கள் கடத்தலில் ஈடுபடுவதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர், பிடிபட்ட நபர்கள் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டை பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதாக முயன்றது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து எஸ் நிரோன் என்ற நாட்டுப் படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி, சுனாமி காலனியை சேர்ந்த கெனிஸ்டன்(வயது29), ராம்தாஸ்நகர் பொன்சிஸ் ராஜா(37), சிலுவைபட்டி பனிமயகார்வின்(19), கருப்பசாமிநகர் மாதவன்(21) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News