சுரேஷ், வாசுதேவன்.
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.1,500: ரூ.24 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர்கள் கைது
- பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
- கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியில் டே பை டே என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர்கள் வாசுதேவன் மற்றும் சுரேஷ். இவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த நிதி நிறுவனத்தை தொடங்கி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
இதில் ரூ.1லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்கள் தினமும் ரூ.1500 பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும்,அந்த முதலீட்டா ளர்களை அறிமுகப்படுத்தும் ஏஜெண்டுகளுக்கு தினமும் ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். மேலும் முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நபருக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். போட்டி போட்டு முதலீட்டாளர்களையும் அறிமுகப்படுத்தினர். இந்த நிறுவனத்தில் பொது மக்கள் சுமார் ரூ.24 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் வரை பணம் திருப்பி கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தையே காலி செய்துவிட்டு இயக்குனர்கள் வாசுதேவன் மற்றும் சுரேஷ் தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.மேலும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி தலைமறைவான வாசுதேவன் மற்றும் சுரேசை தேடி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த வாசுதேவனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.அதே போல் சுரேஷ் தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பனபாக்கத்திற்கு சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.