தமிழ்நாடு செய்திகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சதுர அடி நிலம் ரூ.1000-ஆக நிர்ணயம்: வழிகாட்டி மதிப்பு வெளியீடு

Published On 2023-08-25 14:50 IST   |   Update On 2023-08-25 16:00:00 IST
  • ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு ரூ.800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • நகராட்சி பகுதிகளில் சதுரஅடிக்கு ரூ.300 ஆகவும், பேரூராட்சி பகுதிகளில் ரூ.200 ஆகவும் நிர்ணயித்து உள்ளார்கள்.

சென்னை:

தமிழக பத்திரப் பதிவுத்துறை மாநிலம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை சீரமைத்து அறிவித்துள்ளது.

இந்த புதிய வழிகாட்டி மதிப்பு இந்த மாதமே அமுலுக்கு வந்துவிட்டது. எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ளார்.

புதிய கட்டணப்படி சென்னை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏரியாவுக்கு தகுந்த மாதிரி வழிகாட்டி மதிப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு ரூ.800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு ஏரியாவுக்கு தகுந்தாற்போல் சதுரடிக்கு ரூ.300-ஆக இருந்த இடங்களும் உண்டு. மதிப்பை மாற்றி அமைத்திருப்பதன் மூலம் மதிப்பு குறைவான இடங்களிலும் இனி விலை உயரும்.

ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் ஆகிய மாநகராட்சி பகதிகளில் குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ.700-ஆகவும், திருநெல்வேலி, கரூர், வேலூர், திண்டுக்கல் மாநகராட்சிகளில் ரூ.600-ஆகவும் தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம், மாநகராட்சி பகுதிகளில் ரூ.500-ஆகவும், கடலூர் மாநகராட்சி பகுதியில் ரூ.300-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி பகுதிகளில் சதுரஅடிக்கு ரூ.300 ஆகவும், பேரூராட்சி பகுதிகளில் ரூ.200 ஆகவும் நிர்ணயித்து உள்ளார்கள். அதே நேரம் காஞ்சிபுரம், திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு சதுர அடிக்கு குறைந்தபட்சம் ரூ.100-ஆகவும் விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு சதுர அடிக்கு ரூ.50-ஆகவும், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் ஆகவும் நிர்ணயித்து உள்ளார்கள். பத்திரப்பதிவு கட்டணம் 11 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் வழி காட்டி மதிப்பு சில இடங்களில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உள்ளது. இந்த கட்டண உயர்வு அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யலாம். ஆனால் நிலம், வீடு வாங்குவோருக்கு பலன் கிடைக்காது.

பணம் கொழிக்கும் இந்த துறையின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இத்தனை கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முன்பு பவருக்கு (அதிகாரப் பத்திரம்) ரூ.10 ஆயிரமாக இருந்தது. இப்போது ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு பத்திரப்பதிவின்போது ஆவணத்தில் எத்தனை பக்கங்கள் இருந்தாலும் நூறு ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது ஒரு பக்கத்துக்கு ரூ.100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 10 பக்கம் இருந்தால் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த மறுசீரமைப்பு குறித்து இந்திய கட்டுமான சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

முத்திரைத்தாள் கட்டணம் 2 சதவீதத்தை குறைத்து விட்டு வழிகாட்டி மதிப்பை கடுமையாக உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையைத்தான் கொடுக்கும். இதனால் தங்கள் அடிப்படை தேவைக்காக வீடு, இடங்கள் வாங்குவது குறையும். இதன் மூலம் கட்டுமான தொழில், ரியல்-எஸ்டேட் தொழில் நலியும், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமல்ல இந்த தொழில்சார்ந்த பல பொருட்களின் விற்பனை குறையும். இதன் மூலம் அரசுக்கு வரும் வரிவருவாய் குறையும். ஒரு பக்கம் அதிக லாபத்தை ஈட்ட முனைந்தால் இன்னொரு பக்கம் இழப்பும் ஏற்படும். இது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தடங்கலாக அமையும்.

உதாரணமாக ஒருவர் 25 வயதில் வேலைக்கு சேர்ந்தாலும் ஓய்வு பெறுவதற்குள் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். அதில் தனது கனவாக ஒரு வீடு வாங்க நினைப்பார்.

அவ்வாறு வாங்கும்போது ரூ.20 லட்சம் வரை செல வாக இருந்தால் அவரால் எப்படி வீடு வாங்க முடியும்? முதல் முதலாக ஒருவர் வீடு வாங்கும்போது அவருக்கு வரி இல்லாமல் பதிவு செய்து கொடுக்க வேண்டும். அதுதான் சாமானிய மக்களின் கனவுக்கு அரசும் துணை நிற்பதாக அர்த்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News