தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை காணலாம்.

பழைய இரும்பு குடோனில் பதுக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Published On 2023-01-16 06:41 GMT   |   Update On 2023-01-16 06:41 GMT
  • குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய கிடைத்தது.
  • தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு நண்பரிடம் இருந்து செம்மரக்கட்டைகளை வாங்கியதாக செல்லபாண்டியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குளித்தலை:

கரூர் மாவட்டம் குளித்தலை தெப்பக்குளம் தெருவில் வசித்து வருபவர் செல்லபாண்டியன். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு சாமான்கள் குடோன் வைத்துள்ளார்.

இந்த குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் அந்த குடோனில் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த குடோனில் பதுக்கி வைத்திருந்த 590 கிலோ எடையுள்ள 21 செம்மரகட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் உரிமையாளரான செல்லபாண்டியனையும் கைது செய்தனர். பின்னர் அவரை மேல் மேல்விசாரணைக்காக கரூர் வனச்சரகம் சின்னதாதமபாளையத்தில் உள்ள வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளும் ஒப்படைக்கப்பட்டன.

வனத்துறையினர் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு நண்பரிடம் இருந்து செம்மரக்கட்டைகளை வாங்கியதாக செல்லபாண்டியன் வாக்குமூலம் அளித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளில் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

கைதான செல்லபாண்டியனை, கரூர் வனச்சரக அலுவலர் தண்டபாணி, வனவர்கள் சாமியப்பன், கோபிநாத் ஆகியோர் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் மணப்பாறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து வழக்குப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News