தமிழ்நாடு செய்திகள்

போலீசார் துப்பாக்கி முனையில் பிடிக்க சென்றபோது மேம்பாலத்தில் இருந்து குதித்த ரவுடி சகோதரர்கள்

Published On 2023-03-13 16:22 IST   |   Update On 2023-03-13 16:22:00 IST
  • பிரபா மற்றும் மண்டேலா ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.
  • சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

தமிழகத்தில் ரவுடிகளை கைதுசெய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போலீசாரை தாக்கி தப்பும் ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த நிலையில் காஞ்சிபுரத்திலும் ரவுடி கும்பல் குறித்து போலீசார் கண்காணித்தனர்.

அப்போது காஞ்சிபுரத்தை கலக்கிய மறைந்த பிரபல ரவுடி தனபாலின் வலது கரமாக இருந்து வந்த பிரபல ரவுடி தியாகுவின் கூட்டாளிகளான பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரபா மற்றும் மண்டேலா ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. ஏற்கனவே ரவுடி தியாகு சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

எனினும் ரவுடி சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலா ஆகியோரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்களது இருப்பிடம் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதில் சகோதரர்கள் இருவரும் நேற்று இரவு காஞ்சிபுரம் புதிய ரெயில்வே நிலையம் மேம்பாலம் பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி முனையில் ரவுடி சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலாவை சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி மேம்பாலத்தில் மேலே இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றனர்.

இதில் பிரபா, மண்டேலா ஆகிய இருவருக்கும் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்ய முயன்ற போது ரவுடிகள் இருவரும் மேம்பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News