தமிழ்நாடு

 ராஜன்-உமாதேவி

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி கொலை: கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு

Published On 2023-10-21 06:08 GMT   |   Update On 2023-10-21 06:18 GMT
  • சம்பவத்தன்று ராஜனின் மகள் பத்மா பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.
  • வயதான 2 பேரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட நபர்தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் கே.எம்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 68). இவரது மனைவி உமாதேவி (65) இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

இவர்களது மகன் சோழனுக்கு திருமணமாகி பெங்களூருவிலும், மகள் பத்மா திருமணம் ஆகி புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர். தற்போது வளவனூரில் உள்ள வீட்டில் வயதான தம்பதி மட்டும் வசித்து வந்தனர். இதனிடையே சம்பவத்தன்று ராஜனின் மகள் பத்மா பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.

நீண்ட நேரமாக போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது ராஜன்-உமாதேவி ஆகியோர் தனித்தனி அறைகளில் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பத்மாவிடமும், அருகில் உள்ள வளவனூர் போலீஸ் நிலையத்திலும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்ளிட்டவர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

ராஜன், உமாதேவி 2 பேரும் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர்கள் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று காலை வழக்கம் போல் 2 பேரும் வெளியில் சென்று விட்டு மாலை 3 மணிக்கு வீட்டு சென்றுள்ளனர். வீட்டில் வேலை செய்த பெண்ணும் தனது பணியை முடித்து விட்டு சென்றுள்ளார்.

அதன் பிறகு 2 பேரும் வெளியே வரவில்லை. 5 மணிக்கு பால்காரர் அவர்களை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் அவர் சென்று விட்டார். அதன்பிறகுதான் மகள் பத்மா, பெற்றோருக்கு நீண்டநேரமாக போன் செய்யவே 2 பேரின் போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அருகிலிருந்தவர்களை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியபோதுதான் 2 பேரும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

வயதான 2 பேரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட நபர்தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனியொருவனாக வந்திருக்கலாம் என்றும், அவர்களை கொலை செய்து விட்டு அங்கிருந்த 4 அரை பவுன் நகை, செல்போன்களை திருடிச்சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராஜன் மகள் பத்மா அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். குற்றவாளியை கண்டு பிடிக்க டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளிலும் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், செல்போன் சிக்னல்களை கொண்டு புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நகைக்காக இந்த கொடூர கொலையை அரங்கேற்றிய குற்றவாளியை சுட்டு பிடிக்கும் வகையிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News