தமிழ்நாடு

33 மீனவர்கள் விடுதலை: 2வது முறையாக கைதான 3 பேருக்கு சிறை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-03-27 09:30 GMT   |   Update On 2024-03-27 09:31 GMT
  • கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
  • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 17-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஆரோக்கிய சுகந்தன், இஸ்ரோல் ஆகியோரின் 2 விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர். அந்த படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தரபாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, ராயப்பு லியோனார் (32) உள்பட 21 மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் கடந்த மாதம் 13-ந்தேதி இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்கால் முருகானந்தம், இரும்பன், பாபு உள்பட 15 பேரை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 36 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் 33 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 3 மீனவர்கள் ஏற்கனவே ஒருமுறை கைதானதால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்ற 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News