தமிழ்நாடு செய்திகள்

தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 479 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-09-09 09:07 IST   |   Update On 2023-09-09 09:07:00 IST
  • நேற்று மாலை முதல் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.
  • பாசனத்துக்காக தொடர்ந்து வினாடிக்கு 6500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 3 மாதத்துக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட போது நீர்மட்டம் 103 அடியாக இருந்த நிலையில் தற்போது கிடுகிடுவென குறைந்து 50 அடிக்கு கீழே நீர்மட்டம் உள்ளது.

தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததாலும், தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை முழுமையாக வெளியே தெரிகிறது.

மேலும் நீர்த்தேக்க பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் அணை குட்டை போல் காட்சி அளிக்கிறது. மேலும் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம், பாளமாக நிலப்பகுதி வெடித்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மழை காரணமாக நீர்த்தேக்க பகுதிகளில் புல்முளைத்து காணப்படுகிறது. அந்த இடங்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதாவது 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட உத்தரவிட்டது. அதன்படி கடந்த 29-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.

இதற்கிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 479 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 46.55 அடியாக இருந்தது. அணையில்இருந்து பாசனத்துக்காக தொடர்ந்து வினாடிக்கு 6500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News