தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை- நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் கவலை

Published On 2022-10-09 06:13 GMT   |   Update On 2022-10-09 06:13 GMT
  • இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.
  • மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதாவது பொதுவாக இந்த காலகட்டத்தில் மழை இன்றி வெயில் அடிக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை இன்றி காணப்பட்டதால் குறுவை அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்ட குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. சில இடங்களில் இறுதி கட்டத்தை எட்டியது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் அறுவடை பாதிக்குமோ என விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மேலும் இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், புங்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சில இடங்களில் கொள்முதல் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதனால் அறுவடை செய்த நெல் மற்றும் வயலில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.

தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News