தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற 2250 கிராம செவிலியர்களை நியமிக்க ஏற்பாடு

Published On 2023-10-12 05:14 GMT   |   Update On 2023-10-12 06:31 GMT
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

சென்னை:

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் அரசு துணை சுகாதார மையங்களில் 8,713 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தவிர மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கும் செவிலியர்கள் பணியிடங்கள் உள்ளது.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 2250 கிராம செவிலியர்களை தேர்ந்தெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு 2,250 பேரை தேர்ந்தெடுக்க தற்காலிக அடிப்படையில் ரூ.19,500 ஊதிய விகிதத்தில் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது, கல்வித் தகுதி, பொது தகவல், தகுதி நிபந்தனைகள் பிற முக்கிய வழிமுறைகள் போன்ற விவரங்கள் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

இந்த ஒப்பந்த செவிலியர்கள் 2016, 2017 மற்றும் 2020-ம்ஆண்டு கால கட்டங்களில் பணிக்கு வந்தவர்கள்.

அவர்களுடைய பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அவர்களை மீண்டும் மாவட்ட மருத்துவ சங்கம் மூலம் 14,000 ரூபாயில் இருந்து மூலம் 18,000 ரூபாயாக உயர்த்தி அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

இந்நிலையில் செவிலியர்களுக்கு தற்போது 499 நிரந்தர செவிலியர்கள் காலியிடங்கள் உள்ளது. அந்த 499 செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை ஒப்பந்த செவிலியர்களையே நிரப்பிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

13.10.2023 அன்று கலந்தாய்வு மூலம் மூப்பு நிலை மற்றும் சுழற்சி மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தற்போது எம்.ஆர்.பி. மூலம் ஒப்பந்ததார செவிலியர்கள் கால முறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News