தமிழ்நாடு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு- பரிசல் இயக்க விடாமல் தடுத்து பொதுமக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-05 10:16 GMT   |   Update On 2023-06-05 10:16 GMT
  • பரிசல் பயண கட்டணம், தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.
  • பொதுமக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், பரிசல் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக, 100 மடங்கு கட்டண உயர்வை மேற்கொண்டு உள்ளனர்.

ஏரியூர்:

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகில் உள்ள, தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையை கடந்து செல்ல, மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடக்க வேண்டி உள்ளது.

இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடந்து செல்வதற்காக, ஒட்டனூர்-கோட்டையூர் இடையே ஒரு பரிசல் துறையும், நாகமரை-பண்ணவாடி இடையே மற்றொரு பரிசல் துறையும் உள்ளது.

இதை பயன்படுத்தி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும், சேலம் மாவட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் இதற்காக பரிசல் பயண கட்டணம், தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.

இது கடந்த மூன்று ஆண்டுகளில், படிப்படியாக உயர்ந்து, தற்போது தனி நபருக்கு 20 ரூபாய் எனவும், இரு சக்கர வாகனத்திற்கு 40 ரூபாய் எனவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் புதிய டெண்டர் விடப்பட்டது. இதில் டெண்டர் எடுத்தவர்கள் 50 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனதால், கட்டுபடியாகாது என மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, கூடுதல் கட்டணத்திற்கு அனுமதி வாங்கியுள்ளனர்.

தொழில் போட்டி காரணமாக அதிக விலைக்கு ஏலம் எடுத்து விட்டு, அதற்கான தொகையை பொதுமக்களிடம் வசூலிக்க ஒப்பந்ததாரர்கள் முயற்சிப்பதும், அதற்கு ஏரியூர் அதிகாரிகள் துணை போவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏரியூர் அதிகாரிகள் பொது மக்களின் நலனில் அக்கறை கட்டாமல், பொதுமக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், பரிசல் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக, 100 மடங்கு கட்டண உயர்வை மேற்கொண்டு உள்ளனர். இதனால் இப்பகுதி பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இத்தகைய கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இப்பகுதி பொதுமக்கள் கடந்த 2-ம் தேதி ஏரியூர் போலீஸ் நிலையம் மற்றும் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோரிடம் மனு அளித்தனர்.

மேலும் 40-க்கும் மேற்பட்ட இப்பகுதி பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது உடனடி கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விரைவில் சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இன்று காலை திடீரென கரையோரத்தில் பரிசலை இழுத்துக்கட்டி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து உரிய பேச்சு வார்த்தை நடத்தி எங்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News