அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம்
- அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகத்தையும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சுமார் ஒரு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த அம்பேத்கர் நகர் பகுதியில் சாலை வசதி சரியில்லை, மின்விளக்கு வசதி சரியில்லை, குடிநீர் மேல்நிலைத் தொட்டி பழுதடைந்து உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தராத தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே, பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோஷமிட்டனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலக நிதி அல்லது ஊராட்சி மன்ற நிதி ஆகியவற்றில் இருந்து தேவையான அனைத்து வசதிகளையும் விதிகளுக்கு உட்பட்டு போர்க்கால அடிப்படையில் செய்து தருவதாக உறுதி கூறினார். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.