தமிழ்நாடு

பூண்டி ஏரியை 2 அடி ஆழப்படுத்த முடிவு- கரைகளை பலப்படுத்த நடவடிக்கை

Published On 2022-07-02 06:21 GMT   |   Update On 2022-07-02 06:21 GMT
  • பூண்டி ஏரியின் கரைகளை உயர்த்தி 5 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • பூண்டி ஏரியின் தற்போதைய ஆழம் 35 அடி ஆகும். இது 37 அடியாக ஆழப்படுத்தப்பட்டு உள்ளது.

ஊத்துக்கோட்டை:

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த 5 ஏரிகளில் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும்.3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

கடந்த 2 வருடங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் மதகு வழியாக திறந்துவிடப்பட்டது. இப்படி சுமார் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்தது. சென்னை மக்களின் 1 வருட குடிநீர் சராசரி தேவை 12 டி.எம்.சி. ஆகும். தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல திட்டங்கள் வகுத்துள்ளனர்.

குறிப்பாக பூண்டி ஏரியின் கரைகளை உயர்த்தி 5 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கொள்ளளவு 3. 231.டி.எம்சி. ஆகும். கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க மதகுகள் மறுசீரமைப்பு செய்து ஏரியின் பரப்பளவை அதிகப்படுத்த, தனியாரிடமிருந்து இடம் வாங்கி, கரைகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக மண் தரம் மற்றும் தரை கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர்கள் ஸ்ரீதரன், குமரன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் சில நாட்கள் முன்னர் ஏரியை ஆய்வு செய்தனர். இக்குழு தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

அரசு நிதி ஒதுக்கிய பின்னர் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க வைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

இதற்காக பூண்டி ஏரியை 2 அடி ஆழப்படுத்துகிறார்கள். பூண்டி ஏரியின் தற்போதைய ஆழம் 35 அடி ஆகும். இது 37 அடியாக ஆழப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே திருவள்ளூர் அருகே உள்ள ராமஞ்சேரியில் 20 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க திறனுள்ள பிரம்மாண்ட அணை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் கிருஷ்ணா தண்ணீர் வீணாவதை தடுக்க கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் வழியாக நீரை கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி கால்வாய் அமைத்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சென்னைக்கு கொண்டு செல்ல முடியும்.

Tags:    

Similar News