தமிழ்நாடு

போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி

நாகர்கோவில் புத்தேரியில் கனரக வாகனங்களை சிறை பிடிக்க திரண்ட பொதுமக்கள்- போலீசார் பேச்சுவார்த்தை

Published On 2023-08-03 07:21 GMT   |   Update On 2023-08-03 07:21 GMT
  • கனிம வளங்களை கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
  • கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் சாலைகள் சேதம் அடைவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

நாகர்கோவில்:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் குமரிமாவட்டம் வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துக்கள் நடந்து வருவதாகவும் சாலைகள் சேதம் அடைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கனரக வாகனங்களில் கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 10 சக்கர வாகனங்களில் 28 டன் எடையில் மட்டுமே கனிவளங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனிம வளங்களை கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புத்தேரி வழியாக கனிம வளங்களை கொண்டு செல்வதுடன் மீண்டும் அதே வழியாக வாகனங்கள் திரும்பி வருவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் சாலைகள் சேதம் அடைவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்நிலையில் இன்று காலை புத்தேரி பகுதி பொதுமக்கள் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டம் நடத்த பாரதிய ஜனதா மீனவர் அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் சகாயம் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புத்தேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News