தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு- போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

Published On 2023-03-01 13:13 IST   |   Update On 2023-03-01 13:13:00 IST
  • வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் வெற்றி சான்றிதழ் தரும் வரை முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.
  • கிழக்கு தொகுதி மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. போலீஸ் சார்பில் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ட்ராங் ரூமுக்கு இரண்டு கம்பெனி மத்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமன்றி, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளூர் போலீசார் என 750 க்கும் மேற்பட்டோர் 2 மற்றும் மூன்றாவது அடுக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை வாக்கு எண்ணிக்கையின்போது, முகவர்கள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன. எவை எடுத்து வர வேண்டும் எதை எடுத்து வரக்கூடாது என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் வெற்றி சான்றிதழ் தரும் வரை முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.

எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். தண்ணீர் பாட்டில் இங்க் பென் தீப்பெட்டி போன்ற பொருட்கள் உள்ளே எடுத்து வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போலவே கிழக்கு தொகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு தொகுதி மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News