தமிழ்நாடு செய்திகள்

மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி- மாணவரின் பாஸ்போர்ட்டை முடக்க போலீசார் முடிவு

Published On 2023-06-26 14:36 IST   |   Update On 2023-06-26 14:36:00 IST
  • சாமிநாதன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
  • ஜோகித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு எல்லப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி(52). இவர் ஈரோடு ஆவினில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வேலுச்சாமி(52). ஜே.சி.பி. சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார். இவர்களது மகன் ஜோகித்(24). உக்ரைன் நாட்டில் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) படித்து வருகிறார்.

இந்நிலையில் தனலட்சுமி, வேலுச்சாமி, ஜோகித் ஆகியோர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த சாமிநாதன் மகன் கவியரசு, அவரது நண்பர் நவீன் வர்ஷன் ஆகியோரை உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.14.96 லட்சத்தை பெற்றனர். ஆனால் ஜோகித் இருவருக்கும் மருத்துவம் சீட் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து சாமிநாதன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், தனலட்சுமி, வேலுச்சாமி, ஜோகித் மீது கூட்டு சதி, மோசடி, ஏமாற்றுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 22-ந் தேதி தனலட்சுமி, வேலுச்சாமியை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

ஜோகித்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தலைறைவான இவர்களது மகன் ஜோகித்தின் பாஸ்போர்ட்டினை முடக்கம் செய்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்தாலும், இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் மருத்துவராக பயிற்சி பெற முடியும். ஜோகித் செல்போன் எண் இந்தியாவில் பயன்படுத்தும் எண்ணாக தான் உள்ளது. ஆனால் கைதான அவரது பெற்றோர் ஜோகித் உக்ரைனில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜோகித் வேறு நாட்டிற்கு புலம் பெயராமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டினை முடக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News