தமிழ்நாடு

புறாக்களின் எச்சத்தால் நுரையீரல் பாதித்து உயிர் இழக்கும் அபாயம்- கவனமாக இருக்க டாக்டர்கள் வேண்டுகோள்

Published On 2023-05-05 07:50 GMT   |   Update On 2023-05-05 07:50 GMT
  • புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
  • உணவளிக்கும் போதும், எச்சங்களை அகற்றும் போதும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

சென்னை:

புறா வளர்ப்பதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் அதிகம் உண்டு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். புறா எச்சம் காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், கொரோனா பாதிப்பு அவரது நுரையீரலை மேலும் பலவீனப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததன் பின்னணியில் புறாக்களின் எச்சம் காரணமாக இருந்தது அந்நாட்டு மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புறாக்களுக்கு உணவளிப்பதையும், அதன் எச்சத்தை சுத்தம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சில வருடங்களில் அவர் மூச்சு விட முடியாமல் தவித்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் பிழைத்து இருக்கிறார். மருத்துவ செலவுக்காக அவர் ரூ.35 லட்சம் செலவழித்து உள்ளார்.

புறாக்களின் எச்சங்களை சுவாசிப்பது மிகப்பெரிய தீங்கை விளைவித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

புறாக்களின் இறக்கையில் இருக்கும் செல் பூச்சிகள், எச்சங்களில் இருந்து வெளி வரும் பூஞ்சைகள் ஆகியவற்றை சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்கிறது. இது நாளடைவில் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கிறது. நுரையீரலில் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டறிவது கடினம் என்பதால் தொற்றுகள் நுரையீரல் திசுக்களை செயலற்றதாக்கி விடுகிறது. இது போன்ற பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. எனவே புறாக்களை கையாளும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

புறாக்களுக்கு உணவளிக்கும் போதும், எச்சங்களை அகற்றும் போதும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தில் கை வைக்கவோ, உணவு சாப்பிடவோ கூடாது. புறாக்களின் எச்சங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News