தமிழ்நாடு

பள்ளம் சரி செய்யப்பட்டதால் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 4 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து சீரானது

Published On 2022-11-30 06:04 GMT   |   Update On 2022-11-30 06:04 GMT
  • கடந்த 26-ந்தேதி அதிகாலையில் உருவான இந்த பள்ளத்தை உடனடியாக பொதுமக்கள் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
  • பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலையில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கியது.

சென்னை:

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் அஷ்டபூஜம் தெருவிற்கு செல்லக்கூடிய பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. 20 அடி ஆழம் அளவிற்கு ஏற்பட்ட பள்ளத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடந்த 26-ந்தேதி அதிகாலையில் உருவான இந்த பள்ளத்தை உடனடியாக பொதுமக்கள் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கழிவுநீர் குழாய் உடைந்து அதில் இருந்து நீர் வெளியேறி மண் அரிப்பு ஏற்பட்டதே திடீர் பள்ளம் உருவாவதற்கு காரணம். இதையடுத்து போர்க்கால அடிப்படையில் பள்ளத்தை சீரமைக்கும் பணி அங்கு நடைபெற்றது.

இதனால் அந்த பகுதியில் பஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையில் பள்ளத்தில் சரிந்து விழுந்த மண் வெளியே எடுக்கப்பட்டு மீண்டும் மண் சரிவு ஏற்படாமல் பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சேதமடைந்த 1000 மில்லி மீட்டர் அகலமுள்ள கழிவு நீர் குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் போடப்பட்டது. மீண்டும் கழிவுநீர் கசிவு ஏற்படாத வகையில் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளத்தை நிரப்பி சிமெண்ட் கலவையால் மூடப்பட்டது.

அந்த பகுதியில் மீண்டும் பள்ளம் ஏற்படாத வகையில் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலையில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கியது.

அனைத்து வாகனங்களும் இந்த சாலையில் சென்றன. நேற்று இரவு முதல் 2 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் வடசென்னை பகுதி வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News