தமிழ்நாடு செய்திகள்

தென்மாவட்டங்களில் உற்சாகம் இழந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்

Published On 2023-12-22 12:02 IST   |   Update On 2023-12-22 13:43:00 IST
  • கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.
  • கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கடந்த வாரம் பெய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.

ஒரு சில பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடிந்து உள்ளது. சில இடங்களில் வெள்ளம் மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், உடன்குடி, மெய்ஞானபுரம், நாசரேத், சாத்தான்குளம், உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

தென் மாவட்டங்களில் எப்போதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெறும். கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. திருச்சபைகளை சேர்ந்த ஆலயங்கள் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படும்.

கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.

ஆனால் தற்போது வெள்ளம் பாதித்து மக்கள் கஷ்டப்படுகிற நிலையில் கொண்டாட்டத்தை தவிர்க்கிறார்கள். எளிமையான முறையில் ஆராதனை நடத்தவும், பட்டாசு, வாணவேடிக்கை போன்றவற்றை தவிர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.

மாறாக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். மளிகை பொருட்கள், உணவு, குடிநீர், பிஸ்கட், போர்வை போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

வீடுகளை இழந்து நிற்கதியாக இருக்கும் மக்கள் ஒருபுறம் இருக்க பண்டிகை ஆடம்பரத்தை கிறிஸ்தவர்கள் தவிர்த்துள்ளனர். தங்களால் முடிந்த உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

மேலும் தென் மாவட்டங்களை சேர்ந்த சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வதையும் தவிர்த்து விட்டனர். வழக்கமாக குடும்பம் குடும்பமாக சென்று சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

இந்த முறை பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தற்போதுதான் சீராகி உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்னும் போக்குவரத்து சீரடையாத நிலை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News