தமிழ்நாடு

'ஆபரேஷன் அஜய்' சிறப்பு விமானத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் வருகிறார்கள்- டெல்லி வந்ததும் அழைத்து வர சிறப்பு ஏற்பாடு

Published On 2023-10-12 10:47 GMT   |   Update On 2023-10-12 10:47 GMT
  • சிறப்பு விமானம் இன்று இஸ்ரேல் சென்றுள்ளது.
  • இஸ்ரேலில் போர் பதற்றம் காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்களில் 114 பேர் நம்மிடம் உதவி கேட்டு உள்ளனர்.

சென்னை:

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த சூழலில் இஸ்ரேல் நாட்டில் இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து படிப்பதற்காகவும், வேலைக்காகவும் பலர் அங்கு சென்றுள்ளனர்.

இந்த சூழலில் இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பினால் அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதற்கான சிறப்பு விமானம் இன்று இஸ்ரேல் சென்றுள்ளது. இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ள இந்தியர்களை அழைத்துக் கொண்டு இந்த விமானம் டெல்லிக்கு வருகிறது.

இந்த விமானத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரி ஜெசிந்தா கூறுகையில், இஸ்ரேலில் போர் பதற்றம் காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்களில் 114 பேர் நம்மிடம் உதவி கேட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தூதரக தொடர்பில் உள்ளனர்.

இதில் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்தவர்களை அங்கிருந்து அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை அரசின் மூலம் செய்து வருகிறோம். மத்திய அரசு 'ஆபரேஷன் அஜய்' சிறப்பு விமானம் இயக்க உள்ளது. இன்று புறப்படும் அந்த விமானத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் வர உள்ளனர்.

இந்த சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்ததும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பத்திரமாக இங்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News