தமிழ்நாடு

சின்னமனூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் டெண்ட் அமைத்து குடியேறிய மக்கள்.

வீட்டு மனை பட்டா கேட்டு அரசு புறம்போக்கு நிலத்தில் குடியேறிய மக்கள்- சின்னமனூரில் பரபரப்பு

Published On 2023-06-22 05:10 GMT   |   Update On 2023-06-22 05:10 GMT
  • இதுவரை வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தும் செவி சாய்க்கவில்லை.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பொன்நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வீடற்ற ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு மனு அளித்தனர்.

இப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடியிருப்பு இல்லாததால் மிகுந்த கஷ்டப்பட்டு வருவதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள 2 ஏக்கர் 24 செண்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் தேவேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்களுக்கு வேண்டிய டெண்ட் அமைப்பதற்கான பொருட்களை வழங்கினர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பொதுமக்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு பல்வேறு அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தும் செவி சாய்க்கவில்லை. இதனால் அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதே இடத்தில் தாங்களாகவே இடத்தை ஒதுக்கி குடியிருக்கும் முயற்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும் என்றனர்.

Tags:    

Similar News