தமிழ்நாடு

15 மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு: கோவளம் கடற்கரையில் அலைச்சறுக்கு, பாய்மர படகு போட்டி

Published On 2023-05-12 07:48 GMT   |   Update On 2023-05-12 07:48 GMT
  • பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள் ஆசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
  • வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

மாமல்லபுரம்:

கோவளம் கடற்கரையில், அகில இந்திய அளவிலான அலைச்சறுக்கு, மற்றும் பாய்மர படகு சாகச விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நேற்று மாலை தொடங்கியது. இதனை தமிழ்நாடு பாய்மரப் படகு சங்கம் மற்றும் சென்னை மாவட்ட பாய்மரப் படகு சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, போட்டியை தொடங்கி வைத்தார். தமிழகம்-பாண்டிச்சேரி கடற்படை அதிகாரி ரவிக்குமார் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள், தமிழக கடலோர காவல்படை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த போட்டியில் ராணுவம், கடற்படையை சேர்ந்த 48 வீரர்கள் உள்பட இந்தியா முழுவதும் இருந்து 15 மாநிலங்களை சேர்ந்த படகுபோட்டி குழுக்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக ஓபன், மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதேபோல் பார்முலா கைட் போட்டியும், ஓபன் முறையில் நடக்கிறது.

இதில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள் ஆசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

இந்த அலைச்சறுக்கு மற்றும் பாய்மர படகு போட்டி வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளை கட்டணமின்றி அனைவரும் கண்டு ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News