தமிழ்நாடு செய்திகள்

ஆம்பூர் அருகே காலி குடங்களுடன் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-09-12 11:21 IST   |   Update On 2023-09-12 11:21:00 IST
  • போராட்டக்காரர்களிடம் உமராபாத் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
  • காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பனபள்ளி ஊராட்சி பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து மாதனூர் ஒன்றியக்குழு அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வாணியம்பாடி-பேரணாம்பட்டு சாலைக்கு வந்தனர்.

காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பூபதி மற்றும் துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து சமரசம் பேசினார்.

அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்  துணைத் தலைவரை, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே சிறை பிடித்து அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.

மேலும் அதிகாரிகள் விரைந்து வந்து, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நீடித்ததால் பள்ளி கல்லூரி வாகனங்கள், தனியார் தொழிற்சாலை பஸ்கள் உள்ளிட்டவைகள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

போராட்டக்காரர்களிடம் உமராபாத் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News