தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை: உடுமலை பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து

Published On 2023-08-24 04:46 GMT   |   Update On 2023-08-24 04:46 GMT
  • அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது.
  • அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகள் நீர்வரத்தை பெறுகிறது.

வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது.

இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News