தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு- வினாடிக்கு 2,556 கன அடி நீர் வருகிறது

Published On 2023-09-18 13:13 IST   |   Update On 2023-09-18 13:13:00 IST
  • அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
  • வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் விவசாயிகள் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொண்டனர்.

இந்நிலையில் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உரிய தண்ணீரை திறந்து விடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்தது.

இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்து வருகிறது. பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.

நேற்று காலையில் 2,244 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் வினாடிக்கு 2,556 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் 41.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 40.38 அடியாக சரிந்தது. அணையில் 12.28 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News