தமிழ்நாடு

போலி இன்சூரன்ஸ் ஆவணம் கொடுத்து இழப்பீடு பெற முயற்சி- திருச்சியை சேர்ந்தவருக்கு வலைவீச்சு

Published On 2023-10-21 04:20 GMT   |   Update On 2023-10-21 04:20 GMT
  • ரெங்கராஜ் மனைவி பிரபாவதி என்பவர் இழப்பீடு கேட்டு துறையூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
  • போலியாக பாலிசி ஆவணத்தை தயார் செய்து கொடுத்த கனகராஜ் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சொந்த கிராமத்தில் இருந்து துறையூர் நோக்கி சென்றார்.

தெற்கு ரத வீதி அருகே சென்ற போது, அதே தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த 3 சக்கர வாகனம் ரெங்கராஜின் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரெங்கராஜ் சிகிச்சைக்கு பின்னர், ஒரு சில தினங்களில் இறந்துவிட்டார்.

இது தொடர்பாக இறந்த ரெங்கராஜ் மனைவி பிரபாவதி என்பவர் இழப்பீடு கேட்டு துறையூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் விபத்து ஏற்படுத்திய 3 சக்கர வாகனத்தின் பாலிசி நம்பரை ஆய்வு செய்ததில் அது இருசக்கர வாகனத்திற்குரிய பாலிசி நம்பர் எனவும், அதுவும் போலியாக தயாரித்து வழங்கப்பட்டது எனவும் தெரியவந்தது.

மேலும் போலியாக பாலிசி ஆவணத்தை தயாரித்து கொடுத்தவர் திருச்சி பீம நகரை சேர்ந்த கனகராஜ் (54) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புலன்விசாரணை அலுவலர் அருண்குமார் (47) என்பவர் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் துறையூர் போலீசார் போலியாக பாலிசி ஆவணத்தை தயார் செய்து கொடுத்த கனகராஜ் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான கனகராஜை துறையூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். துறையூர் அருகே போலியாக பாலிசி பத்திரம் தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News