காலிங்கராயர் சிலைக்கு நாளை ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை
- நாட்டு மக்களின் உதவியோடு பவானி ஆற்றிலிருந்து சுமார் 56 மைல் தூரம் பிரிந்து செல்லக்கூடிய வாய்க்காலினை வெட்டி, அணையைக் கட்டியவர் காலிங்கராயர்.
- வலுவான வாய்க்கால் திறக்கப்பட்ட தினமான தை 5-ந் தேதி காலிங்கராயன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பூந்துறையை தலைமையிடமாகக் கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி புரிந்த காலிங்கராயர், ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகள் பாசனம் பெற நற்பணி ஆற்றியவர். தன் ஆளுகைக்குட்பட்ட புன்செய் நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு, தன்னுடைய சொந்தப் பணத்தில், நாட்டு மக்களின் உதவியோடு பவானி ஆற்றிலிருந்து சுமார் 56 மைல் தூரம் பிரிந்து செல்லக்கூடிய வாய்க்காலினை வெட்டி, அணையைக் கட்டியவர் காலிங்கராயர்.
இப்படிப்பட்ட வலுவான வாய்க்கால் திறக்கப்பட்ட தினமான தை 5-ந் தேதி காலிங்கராயன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாளை (19-ந் தேதி) காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம், நாசுவம்பாளையம் ஊராட்சியில் காலிங்கராயர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள காலிங்கராயரின் உருவச்சிலைக்கு அ.தி.மு.க. சார்பில், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முருகானந்தம், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கோவிந்தன் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாரப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.