தமிழ்நாடு

தியாகராய நகரில் ஜானகி அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Published On 2022-11-30 04:49 GMT   |   Update On 2022-11-30 04:49 GMT
  • கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம் என்ற பொது நோக்கோடு செயல்பட்டவர் ஜானகி அம்மையார்.
  • எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில், உரிய அனுமதி பெற்று, எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவனரும், மூன்று முறை தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் குடி கொண்டிருப்பவருமான 'பாரத ரத்னா' எம்.ஜி.ஆரின் மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த வி.என்.ஜானகி அம்மையாரின் 100-வது பிறந்தநாள் விழா தொடக்கத்தினையொட்டி அவருக்கு என் வணக்கத்தினையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் நலன்களுக்காக அ.தி.மு.க. என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை கட்சிக்காக கொடுத்த வள்ளல் ஜானகி அம்மையார். இந்த இடத்தில்தான் தலைமைக்கழகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயரில் இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு முன்பே, 29-07-1987 அன்று அந்தக் கட்டிடத்தை எம்.ஜி.ஆரின் பெயரில் பத்திரப்பதிவு செய்த பெருமைக்குரியவர் ஜானகி அம்மையார் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் அவரையே சாரும்.

கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம் என்ற பொது நோக்கோடு செயல்பட்ட ஜானகி அம்மையாரின் புகழ், அவர் செய்த தியாகம் என்றென்றும் அனைவர் உள்ளங்களிலும், குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் தரை தளத்தில் உள்ள முக்கியப் பிரமுகர் அறைக்கு வி.என்.ஜானகி அம்மையார் பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும், முதல் தளத்தில் உள்ள கூட்ட அறைக்கு புரட்சித்தலைவி அம்மா பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் கழகத் தொண்டர்களால் என்னிடம் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

மேலும், சென்னை, தியாகராய நகரில் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில், உரிய அனுமதி பெற்று, எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News