ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தும் ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்துவதா?- ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
- ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி ஏழை எளிய மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது தி.மு.க. அரசு.
- தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தில் மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, ஒன்றரை ஆண்டுகளில் பால் பொருட்களின் விலை அனைத்தையும் பன்மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி ஏழை எளிய மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது தி.மு.க. அரசு. இவையெல்லாம் போதாதென்று, தற்போது ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது.
தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தில் மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள். மக்களை அரவணைத்துப் பேணி காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.