தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர் விவகாரம்: பா.ஜ.க. பிரமுகரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்திய தூத்துக்குடி போலீசார்

Published On 2023-04-11 05:31 GMT   |   Update On 2023-04-11 05:31 GMT
  • ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டது.
  • விசாரணைக்காக மீண்டும் வருகிற 13-ந்தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

தூத்துக்குடி:

வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இதைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. நிர்வாகியான வக்கீல் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியபாகம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து வக்கீல் பிரசாந்த் குமார் உம்ராவ், சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் பிரசாத் குமார் உம்ராவ் நேற்று விசாரணைக்காக ஆஜர் ஆனார்.

அவரிடம் டி.எஸ்.பி.க்கள் வசந்தராஜ், சத்யராஜ், தூத்துக்குடி மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். காலை தொடங்கிய விசாரணை மாலை வரை 8 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் அவரை விசாரணைக்காக மீண்டும் வருகிற 13-ந்தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

பிரசாந்த் குமார் உம்ராவுக்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு உதவியாக பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், மாவட்ட வக்கீல் அணி சுரேஷ்குமார் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் அவருடன் உடனிருந்தனர்.

இந்நிலையில் ஜாமீன் தொடர்பான வழக்கில் சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்து தொடர்பாக வக்கீல் பிரசாந்த் குமார் உம்ராவ் இன்று தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜரானார்.

Tags:    

Similar News