தமிழ்நாடு

செங்கோட்டை நகராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

Published On 2024-01-18 07:30 GMT   |   Update On 2024-01-18 07:30 GMT
  • ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
  • மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது.

கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நகராட்சியின் 2-வது வார்டில் ராமலெட்சுமி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தலில் அ.தி.மு.க.-10, தி.மு.க.-7, பா.ஜனதா-4, சுயேட்சை-2, காங்கிரஸ்-1 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ராமலட்சுமி அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் ஆதரவுடன் செங்கோட்டை நகராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்கும், சில கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நகராட்சி கூட்டங்களின்போது அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நகராட்சி தலைவி ராமலெட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி கடிதம் வழங்கினர்.

அந்த வகையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 4 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட கடிதம் நகராட்சி பொறுப்பு கமிஷனரான கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் சுகந்தியிடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர், நகராட்சி தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு இன்று (18-ந் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு கமிஷனர் (பொறுப்பு) சுகந்தி தலைமையில் விவாதம், வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் தொடங்கியது.

இதில் மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதனால் போதிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனர் சுகந்தி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராமலெட்சுமியின் நகராட்சி தலைவர் பதவி தப்பியது.

Tags:    

Similar News