தமிழ்நாடு

திருத்தணி அருகே வயலில் பலூனுடன் விழுந்த மர்ம பொருள்

Published On 2023-10-08 07:25 GMT   |   Update On 2023-10-08 07:26 GMT
  • சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததை கண்டு கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
  • கீழே விழுந்து கிடந்த பொருட்களை ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் சேகரித்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

திருவள்ளூர்:

திருத்தணி அடுத்த ஆர்.கே. பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதிவராகபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் நேற்று காலை வானத்தில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்தது.

பலூன் போன்று இருந்த அதன் அருகில் மர்ம பொருள் ஒன்று கிடந்தது. அதில் இருந்து சிக்னல் வந்தபடி இருந்தது. மேலும் சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததை கண்டு கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆர். கே. பேட்டை போலீசார் விரைந்து வந்து மர்ம பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அந்த மர்ம பொருளில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் போன் நம்பரும் இருந்தது.

அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அதிகாரிகள் விசாரித்தபோது அந்த மர்ம பொருள் வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது.

மீட்கப்ட்ட சிறிய பெட்டி பல்வேறு பகுதியில் வெப்பநிலை, வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவிகரமாக இருக்கும் என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து அங்கு கீழே விழுந்து கிடந்த பொருட்களை ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் சேகரித்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News