தமிழ்நாடு செய்திகள்

ரூ.5 லட்சத்துக்கு பெண் குழந்தையை ரகசியமாக விற்க முயன்ற மாமியார்- இளம்பெண் பகீர் தகவல்

Published On 2022-11-18 11:11 IST   |   Update On 2022-11-18 11:11:00 IST
  • கடந்த வாரம் வீட்டை விட்டு சென்ற மனோஜ்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
  • சங்கீதா மற்றும் அவரது 2 மாத குழந்தையை நாமக்கல்லில் உள்ள அரசு காப்பகத்தில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

நாமக்கல்:

சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 25). இவரது மனைவி சங்கீதா (22). இருவரும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்தனர். அப்போது சங்கீதா கர்ப்பமானார். உடன் இருந்து கவனிக்க உறவினர் யாரும் இல்லாததால் மனோஜ் குமார் தனது தாயாரிடம் கூறினார்.

திருப்பூரிலிருந்து அழைத்து வந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்தார் .கடந்த 2 மாதத்திற்கு முன் சங்கீதாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் வீட்டை விட்டு சென்ற மனோஜ்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இது குறித்து மனோஜ்குமாரின் தாயாரிடம் சங்கீதா கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை. மேலும் அவர் 2 மாத பெண் குழந்தையை புரோக்கர் மூலம் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை விசாரிக்க மறுத்துவிட்டனர். இதனால் சங்கீதா நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்று இரவு புகார் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், குழந்தை பிறந்தது முதல் மனோஜ்குமார் வீட்டில் சண்டை போட்டு வந்தார். ஒரு கட்டத்தில் எனக்கும், கணவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதற்கு பெண் குழந்தை தான் காரணம் என நினைத்து அந்த குழந்தையை எனது மாமியார் ரகசியமாக விறக்க முயன்றார் என தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சங்கீதாவின் மாமியாரிடம், நீங்கள் பேரம் பேசிய புரோக்கர் யார்? குழந்தையை யாருக்கு விற்க நினைத்தீர்கள்? என துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

சங்கீதா மற்றும் அவரது 2 மாத குழந்தையை நாமக்கல்லில் உள்ள அரசு காப்பகத்தில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

Tags:    

Similar News