தமிழ்நாடு

பள்ளி சீருடை தைக்க கூடுதல் நெருக்கடி: அதிகாரிகளை கண்டித்து தையல் தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2024-03-14 05:14 GMT   |   Update On 2024-03-14 05:14 GMT
  • தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும்.
  • கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1680க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக சட்டைக்கு ரூ.22, கால்சட்டைக்கு ரூ.42 கூலி வழங்கப்படுகிறது. பெரும்பாலான சீருடைகள் மாணவர்கள் அணியும் நிலையில் இல்லை என்றும், தரமாக தைக்கப்படவில்லை என்றும் புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தேவி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

அதன்படி தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும். கேன்வாஸ் வைத்து தரமான பட்டன் காஜா வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

ஆனால் கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும். இந்த தொழிலை நம்பி ஏராளமான மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

எனவே இந்த உத்தரவுகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஷியாமளா தேவி மறுத்ததுடன் சங்கத்தை பூட்டி விட்டார். உங்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிவித்தார். இதனால் தையல் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஷியாமளா தேவி உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News