தமிழ்நாடு

நடுக்கடலில் மாயமான 10 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

Published On 2024-02-09 09:35 GMT   |   Update On 2024-02-09 09:35 GMT
  • கடந்த 3-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
  • அதிகாரிகள் மினிக்காய் தீவிற்கு சென்று பழுதாகி நின்ற படகில் இருந்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மரியான் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ஜெயராஜ்.

இவருக்கு சொந்தமான விசைப்படகில் தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த ஜெனிஸ்டன் (வயது 24), கார்த்திக், அருள், பிச்சையா, இஸ்ரவேல், அழகாபுரியை சேர்ந்த மதன், பாலா, நிவாஸ், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த குணா உள்ளிட்ட 10 மீனவர்கள் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி தங்குகடல் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் கடந்த 3-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அருகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் மூலம் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், நடுக்கடலில் தவித்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அவர்கள் கேரளா மாநிலம் மினிக்காய் தீவில் இருந்து சுமார் 250 கடல் மைல் தொலைவில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மினிக்காய் தீவு கடலோர காவல்படை, அதிகாரிகள் மினிக்காய் தீவிற்கு சென்று பழுதாகி நின்ற படகில் இருந்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து கொச்சி துறைமுகத்தில் இருந்து படகு வரவழைக்கப்பட்டு அந்த படகு மூலம் கயிறு கட்டி பழுதான படகை மீட்கும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்களும், பழுதான படகும் அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்துவரப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News