தமிழ்நாடு

விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சர்கள் பெரியசாமி, சேகர்பாபு ஆகியோர் வழங்கியபோது எடுத்த படம்.

இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி- அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

Published On 2022-10-18 03:51 GMT   |   Update On 2022-10-18 03:51 GMT
  • மகளிர் சுயஉதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது.
  • மகளிர் சுயஉதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்த கடன் கேட்டாலும் அதை கொடுக்குமாறு மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

ராயபுரம்:

சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோவில் தெரு அருகே உள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கூட்டுறவு சங்க தலைவர் பெரம்பூர் ஆர்.மகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். பின்னர் மகளிர் சுயஉதவி குழு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 57 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவிகளை வழங்கினார்கள்.

பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

மகளிர் சுயஉதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை தருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்த கடன் கேட்டாலும் அதை கொடுக்குமாறு மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மத்திய கூட்டுறவு வங்கியும் பெண்களுக்கு கடன் கொடுக்க தயாராக உள்ளது

மொத்தத்தில் 99.5 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதியானவராக யார் இருந்தாலும் அரசின் நலத்திட்டங்களையும், அதன் பயன்களையும் பெற்றுக்கொள்ளலாம், மாநில அரசு வெளிப்படையாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது யார் வேண்டுமானாலும் எங்கள் திட்டங்களை ஆய்வு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கூட்டுறவு துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பதிவாளர் சண்முக சுந்தரம், மேலாண்மை இயக்குனர் அமலதாஸ், ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளையஅருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News