கால்பந்து வீராங்கனை மாணவி கால் இழப்பு பற்றி உரிய விசாரணை நடத்தப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்கப்பூரில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சிங்கப்பூரில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் உலக அளவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவப் பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் உட்பட பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்டு சுகாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள்.
இந்த மாநாட்டில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை தொடங்கி வைத்து, கொரோனா பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள், தொற்று நோய்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், பல்வேறு வைரஸ் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இத்தகைய மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதோடு, தமிழகத்தின் கருத்துகளும் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டது. பேரிடர், புதிய வைரஸ் போன்றவைகள் பரவும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொசு மருந்து அடித்தல், புகை அடித்தல் போன்றவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி, மலேரியா ஒழிப்பு துறை ஆயிரக்கணக்கான ஊழியர்களை வைத்து அப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மழை காரணமாக கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா பரவுகின்றன. அந்த நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக தான், மக்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இதை குறிப்பிட்ட சதவீதத்தினர் கேலி செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வரவேற்கின்றனர்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக தான் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு, கல்லூரி மாணவியை அனுப்பி வைத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் என்னிடம் கூறினர். அரசு மருத்துவமனைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கருத்துக்களை பரப்புகின்றனர். இது சரியானது அல்ல.
மருத்துவர்கள் ஆத்மார்த்தமாகத்தான் பணியாற்றுவார்கள். யாரையும் பாதிக்கும் விதத்தில் பணியாற்ற மாட்டார்கள்.
இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகாரையும் ஒதுக்கி தள்ளாமல், அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.