தமிழ்நாடு

நாங்குநேரி மாணவனுக்கு ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2023-08-13 12:43 GMT   |   Update On 2023-08-13 12:43 GMT
  • மாணவனுக்கு கையில் அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
  • 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவனை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டதாக தெரிவித்தார்.

மேலும், மாணவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மகனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என மாணவனின் தாயார் கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த மாணவன் 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காயமடைந்த இருவரும் குணமடைந்ததும் அவர்களை பாதுகாப்பாக படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அவர்களுக்கு தேவையான கல்வியை தொடர அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News