தமிழ்நாடு

‘டீ கப்’ மூலம் ஆக்சிஜன் சுவாசிக்கும் மாணவர்.

உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் முக கவசத்துக்கு பதிலாக 'டீ கப்'- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரணைக்கு உத்தரவு

Published On 2023-08-01 05:16 GMT   |   Update On 2023-08-01 05:16 GMT
  • இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.
  • உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த போது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.

உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர் விரைந்து சென்று அந்த மாணவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதலில் அவருக்கு சீராக சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் நாசி மாஸ்க் பொருத்தும்படி பரிந்துரைத்துள்ளார்கள்.

உடனே வார்டில் அந்த மாணவரை அனுமதித்து மாஸ்க் பொருத்த முடிவு செய்துள்ளார்கள். இந்த மாஸ்கை பொருத்துவவதன் மூலம் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து இன்னொரு துவாரத்தின் வழியாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்ற முடியும்.

இந்த மாஸ்கை பொருத்தும் போது அதில் உள்ள எலாஸ்டிக் கயிறை தலையின் பின்பக்கம் மாட்டி விடுவார்கள். இதனால் மூக்கு மட்டும் வாய் பகுதியை விட்டு நகராமல் அப்படியே இருக்கும்.

ஆனால் இந்த மாணவருக்கு மாஸ்க் இல்லாததால் டீ கப்பில் துவாரம் போட்டு அதை ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபுடன் இணைத்து அதை மாணவர் கையில் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்து கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள். அந்த மாணவரும் அப்படியே பிடித்து சிரமப்பட்டு சமாளித்துள்ளார்.

இதை பார்த்த நோயாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். வீடியோ எடுத்தவர் கூறும்போது, இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த வாரமும் ஒருவருக்கு பொருத்தி இருந்ததை பார்த்தாக கூறி உள்ளார். மாஸ்க்குக்கு பதில் டீ கப்பை பயன்படுத்தியது ஏன்? மாஸ்க் இல்லையா? என்பதற்கு மருத்துவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.

ஒரு பக்கம் இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவசரத்துக்கு சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்களை பாராட்டுவதை தவிர வழியில்லை.

இந்த விவகாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார். 

Tags:    

Similar News