சென்னையில் மழைநீர் தேங்கிய 17 இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
- சென்னை மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது.
- திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.
சென்னை:
சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த முறை மழை பெய்த போதும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்ட அவர் இன்று சென்னையில் மழைநீர் தேங்கிய 17 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகம் மற்றும் சுற்றியுள்ள சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்ட அமைச்சர் எ.வ.வேலு பின்னர் அண்ணாசாலை பகுதியில் ஆய்வு செய்தார்.
அங்குள்ள தாராபூர் டவர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எ.வ.வேலு, எழும்பூர், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை நேரு பூங்கா பகுதியிலும் சென்னையில் மேலும் பல இடங்களிலும் ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் காரணமாக சென்னை மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.
இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வசந்தம் நகர், பருத்திப்பட்டு ஜே.பி. எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு தேங்கிய தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.