தமிழ்நாடு

சென்னையில் ஓடும் மினி பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு மாற்றம்- மக்கள் பாதிக்கப்படுவதாக புகார்

Published On 2023-04-10 07:37 GMT   |   Update On 2023-04-10 07:37 GMT
  • விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 மினிபஸ்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி பகுதியில் மினிபஸ்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை.

சென்னை:

சென்னையில் மாநகர பஸ்கள் செல்ல முடியாத குறுகிய இடங்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. 72 வழித் தடங்களில் 146 மினி பஸ்கள் இயக்க அனுமதி உள்ளன.

ஆனால் டிரைவர் பற்றாக்குறை மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தால் ஒரு சில மினி பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. மினி பஸ்களால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பயணிகள் குறைந்த அளவில் பயன்படுத்துகின்றனர். ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ்கள் நிரம்பி செல்கின்றன.

டெப்போக்களில் ஓடாத, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு சில மினி பஸ்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அனுப்பி பஸ், ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள நகரப்பகுதிகள், மாவட்ட தலை நகரங்களுக்கு மினிபஸ்களை இயக்கினால் கிராமப் பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 மினிபஸ்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் காலியாக ஓடக்கூடிய மினிபஸ்களால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால் பிற மாவட்டங்களுக்கு கொடுத்தால் அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் இயக்கக்கூடிய மினி பஸ்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. 146 மினி பஸ்களில் 120, 125 பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது. 10 சதவீதம் 'ஸ்பேர்' பஸ்கள் உள்ளன.

போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள் சிலர் உடல் சார்ந்த நோய் பிரச்சினைகள் காரணமாக அவர்களுக்கு மினி பஸ்களில் பணி ஒதுக்கப்படுகிறது. வெளிமாவட்டங்களுக்கு மினி பஸ்களை மாற்றும் திட்டம் இல்லை' என்றனர்.

இதற்கிடையில் ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி பகுதியில் மினிபஸ்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை என்றும் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

உதிரி பாகங்கள் இல்லாமலும் பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாமல் ஒரு சில மினி பஸ்கள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News