மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7ஆயிரத்து 231 கனஅடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 231 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடையாததாலும், அணையில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதாலும், கடந்த 23-ந் தேதி முதல் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 231 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 37.91 அடியாக இருந்த நிலையில் இன்று 38.02 அடியாக உயர்ந்து உள்ளது.