தமிழ்நாடு

கல்லூரி பேராசிரியர் பரமசிவம்

மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: பேராசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2023-11-07 09:18 GMT   |   Update On 2023-11-07 09:18 GMT
  • சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
  • சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஹரீஷ் தூத்துக்குடியில் இல்லை என தெரியவந்தது.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுகிர்தா, முதுகலை படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலைக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், பயிற்சி மாணவி ப்ரீத்தி ஆகியோர் தான் காரணம் என சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசாரின் விசாரணை திருப்திகரமாக இல்லை. வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று சுகிர்தாவின் தந்தை மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரித்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

இருப்பினும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் ஹரீசுக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். இன்று அவர் விசாரணைக்கு வருவார் என கருதப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஹரீஷ் தூத்துக்குடியில் இல்லை என தெரியவந்தது.

இதற்கிடையில் ஜெயிலில் உள்ள பேராசிரியர் பரமசிவம், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பேராசிரியர் பரமசிவத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Tags:    

Similar News