தமிழ்நாடு

கவர்னர் பதவி விலக கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

Published On 2023-01-20 09:17 GMT   |   Update On 2023-01-20 09:17 GMT
  • தமிழ்நாட்டின் பெருமைகளையும், சட்டப்பேரவையின் மாண்புகளையும் சிதைத்து அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்.
  • ஒன்றிய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும்.

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

சைதாப்பேட்டை சின்னமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி அளித்தது. அங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். முற்றுகை போராட்டம் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

அரசியல் தலைமைகுழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் சம்பத், வாசுகி, சண்முகம், வெங்கடேசன் எம்.பி., சின்னதுரை எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர்கள் சுந்தர்ராஜன், செல்வா, வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

தமிழ்நாடு பெயர் பயன்படுத்த கவர்னர் ஆர்.என். ரவி மறுத்தது தமிழ்நாட்டுக்கான நீண்ட நெடிய போராட்டத்தை சிறுமைப்படுத்தும் செயலாகும். தமிழக அரசுக்கு எதிராக பொதுஇடங்களில் பேசி வருகிறார்.

தமிழ்நாட்டின் பெருமைகளையும், சட்டப்பேரவையின் மாண்புகளையும் சிதைத்து அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி பதவியை விட்டு வெளியேற வேண்டும். ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில நிர்வாகிகள் தொடர்ந்து பேசியதையடுத்து கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர். பின்னர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News