தமிழ்நாடு

சிறுத்தை தோலுடன் கைதான துரைப்பாண்டி

தேனி அருகே சிறுத்தையை வேட்டையாடி தோலை பதுக்கியவர் கைது

Published On 2022-12-15 05:23 GMT   |   Update On 2022-12-15 05:23 GMT
  • வனத்துறையினர் கஸ்டடியில் எடுத்து துரைப்பாண்டியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
  • துரைப்பாண்டியின் மனைவி செல்லம்மாள் தலைமறைவாகி விட்டதால் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் வடவீரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டியில் கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு வீட்டின் மாடியில் சிறுத்தையின் தோல் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்றபோது முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் துரைப்பாண்டி என்பவர் வீட்டில் சிறுத்தை வேட்டையாடப்பட்டு அதன் தோல் மீது மஞ்சள் தடவி பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த தோலை கைப்பற்றிய வனத்துறையினர் துரைப்பாண்டியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அப்போது தனது சொந்த வேலையை முடித்து விட்டு உடனடியாக வந்து விடுவதாக கூறினார்.

ஆனால் அதன் பிறகு அவர் மாயமானார். இதனைத் தொடர்ந்து துரைப்பாண்டியை தீவிரமாக தேடி வந்த நிலையில் சென்னையில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் துரைப்பாண்டியை கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கஸ்டடியில் எடுத்து துரைப்பாண்டியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே துரைப்பாண்டியின் மனைவி செல்லம்மாள் தலைமறைவாகி விட்டதால் அவரையும் தேடி வருகின்றனர். சிறுத்தை எவ்வாறு உயிரிழந்தது? அது வேட்டையாடப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி எம்.பி.யின் தோட்டப்பகுதியில் சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News