தமிழ்நாடு செய்திகள்

மதுராந்தகம் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி- முதலமைச்சர் உத்தரவு

Published On 2022-12-07 13:29 IST   |   Update On 2022-12-07 13:29:00 IST
  • அமைச்சர் தா.மோ.அன்பரசனை சம்பவ இடத்திற்குச் சென்று, உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.
  • விபத்தில் காயமுற்று செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த 10 பேர் திருவண்ணாமலை கோவிலுக்கு வேன் மூலம் சென்று திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் இன்று (புதன்கிழமை) அதிகாலை சுமார் 3 மணி அளவில் மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சந்திரசேகர் (வயது 70), சசிகுமார் (30), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல் (33) மற்றும் சேகர் (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்செய்தியை அறிந்தவுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசனை சம்பவ இடத்திற்குச் சென்று, உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.

மேலும், விபத்தில் காயமுற்று செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News