தமிழ்நாடு

மதுரை விடுதி பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டதா?- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Published On 2022-09-25 09:41 GMT   |   Update On 2022-09-25 09:41 GMT
  • காளீஸ்வரி ராமநாதபுரத்தை சேர்ந்த டாக்டர் ஆஷிக் என்பவருக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
  • நான் மருத்துவர் என்பதால் பெண்களின் உடலியல் மற்றும் மனோபாவங்களை ஆய்வு செய்து வந்தேன். இதற்காக எனக்கு பெண்கள் இயல்பாக நடந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தேவைப்பட்டது.

மதுரை:

மதுரை அண்ணா நகர் விடுதியில் தங்கி பி.எட். படிக்கும் மாணவி அங்கு தங்கியுள்ள பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்புவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விடுதி காப்பாளர் ஜனனியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர் கூறுகையில், "எங்கள் விடுதியில் தங்கியுள்ள காளீஸ்வரியின் செல்போனில் ஆபாச படங்கள் உள்ளதாக எனக்கு தகவல் வந்தது.

நான் அவரது செல்போனை ஆய்வு செய்தேன். அதில் விடுதி பெண்கள் உடை மாற்றுவது, பனியன்-நைட்டியுடன் இருப்பது மாதிரியான போட்டோ மற்றும் வீடியோக்கள் இருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் காளீஸ்வரியை (வயது 24) பிடித்து விசாரித்தனர். அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

காளீஸ்வரி கூறுகையில், "நான் அண்ணா நகர் விடுதியில் தங்கி இங்குள்ள கல்லூரியில் பி.எட். படித்து வருகிறேன். எனக்கு செல்போனில் போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுப்பது பொழுதுபோக்கு ஆகும். விடுதியில் தங்கியுள்ள பெண்கள் உடை மாற்றுவது, பனியன் அணிந்தபடி திரிவது, நைட்டியுடன் படுத்து தூங்குவது போன்வற்றை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து வந்தேன்.

அவர்கள் குளிப்பதையோ அந்தரங்கமாக இருப்பதையோ படம் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அந்த செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது காளீஸ்வரி ராமநாதபுரத்தை சேர்ந்த டாக்டர் ஆஷிக் என்பவருக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

இதுகுறித்து காளீஸ்வரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கூறுகையில், எனக்கு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சொந்த ஊர். அங்கு எனக்கு டாக்டர் ஆஷிக்குடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. டாக்டர் ஆஷிக் என்னிடம், நீ தங்கும் இடத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து அனுப்ப முடியுமா? என்று கேட்டார். இதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

அதன் பிறகு கடந்த 3 மாதங்களாக செல்போனில் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து, அவற்றை தினந்தோறும் ஆசிக்குக்கு அனுப்பி வந்தேன் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காளீஸ்வரியை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், கமுதியில் உள்ள டாக்டர் ஆசிக்கையும் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

டாக்டர் ஆசிக் கூறுகையில், நான் மருத்துவர் என்பதால் பெண்களின் உடலியல் மற்றும் மனோபாவங்களை ஆய்வு செய்து வந்தேன். இதற்காக எனக்கு பெண்கள் இயல்பாக நடந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தேவைப்பட்டது. நான் இது தொடர்பாக காளீஸ்வரிடம் பேசினேன். அவர் எனக்கு போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தார். இதனை நான் பார்த்து ரசித்தேன். அந்த வீடியோ-போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பவில்லை என்று தெரிவித்தார்.

போலீசார் 2 பேரின் செல்போன்களை ஆய்வு செய்தனர். அவற்றில் 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இருந்தன.

அவற்றில் பல்வேறு வீடியோ மற்றும் புகைப்படங்கள் அழிக்கப்பட்டு இருந்தது. அவை எதற்காக அழிக்கப்பட்டது? அந்தப் படங்கள் அந்தரங்கமாக இருக்கும்போது எடுக்கப்பட்டதா? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News