தமிழ்நாடு

நெல்லையில் இன்று தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு

Published On 2023-09-17 07:16 GMT   |   Update On 2023-09-17 07:16 GMT
  • ஹெலிகாப்டர் மீண்டும் 2 முறை அதே பகுதியில் தாழ்வாக பறந்து சென்று வந்தது.
  • போலீசார் தாழ்வாக பறந்தவாறு சுற்றி வந்த ஹெலிகாப்டர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் இன்று ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது.

குடியிருப்பு மற்றும் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கப்பற்படை தளத்திற்கு சொந்தமான வளாக பகுதி உள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் அந்த ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு நிலவியது.

இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரை தங்களது செல்போன்களில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தனர். அந்த ஹெலிகாப்டரின் இறக்கை அதிவேகமாக சுழன்றது.

அந்த ஹெலிகாப்டர் மீண்டும் 2 முறை அதே பகுதியில் தாழ்வாக பறந்து சென்று வந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் தாழ்வாக பறந்தவாறு சுற்றி வந்த ஹெலிகாப்டர் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ஹெலிகாப்டர் ஐ.என்.எஸ். வளாகத்துக்கு வந்ததா? அவ்வாறு வந்ததெனில் தாழ்வாக பறந்ததன் காரணம் என்ன? என்பது குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்த ஹெலிகாப்டர் இன்று காலை கூடங்குளம், வள்ளியூர் பகுதிகளிலும் தாழ்வாக பறந்து வந்துள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக கூடங்குளத்தில் இழுவை கப்பல் தரை தட்டி நிற்கும் நிலையில் அதில் இருக்கும் நீராவி ஜெனரேட்டர்களை வான் வழியாக மீட்பதற்காக இந்த ஹெலிகாப்டர் வர வழைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News