தமிழ்நாடு செய்திகள்

ஆன்லைன் ரம்மியில் ரூ.1 கோடி இழப்பு: வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு

Published On 2022-12-17 16:02 IST   |   Update On 2022-12-17 16:02:00 IST
  • விஜய் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழந்துவிட்டதாக கூறி புதுப்பாளையம் உள்ளூர் வாட்ஸ் அப் குரூப்பில் பரபரப்பு வீடியோ வெளியிட்டார்.
  • தமிழ்நாடு கவர்மெண்ட் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆன்லைன் ரம்மியை தடை பண்ணுங்க. என் உயிரை மாய்த்துக்கிறேன். என் மரணம் கடைசியாக இருக்கட்டும்.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் விஜய் (வயது 33)இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு அவரது தந்தைக்கு உதவியாக சீட்டு நடத்துவது போன்ற வேலைகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழந்து விட்டதாக கூறி புதுப்பாளையம் உள்ளூர் வாட்ஸ் அப் குரூப்பில் பரபரப்பு வீடியோ வெளியிட்டார்.

அதில் அவர், ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் பெட்டிங் மூலம் ரூ 10 லட்சம் முதல் ஒரு கோடி இழந்துவிட்டேன். நிறைய பணத்தை இழந்துவிட்டேன். தமிழ்நாடு கவர்மெண்ட் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆன்லைன் ரம்மியை தடை பண்ணுங்க. என் உயிரை மாய்த்துக்கிறேன். என் மரணம் கடைசியாக இருக்கட்டும். உதயநிதி அண்ணா உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன். என்னால் எங்க வீட்டுக்கு வந்த கடன் 90 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் இருக்கும். தமிழ்நாடு அரசு சார்பாக நீங்க ஏற்றுக் கொள்ளுங்கள். ப்ளீஸ் அண்ணா என்று வீடியோ பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்த விஜய்யின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரைத் தேடிப் பார்த்தனர். அப்போது புதுப்பாளையம் சுடுகாட்டு அருகே உள்ள கிணற்றின் அருகே இருந்து விஜய்யை மீட்டு அழைத்துச் சென்றனர். தற்கொலை செய்யும் நோக்கத்தில் விஜய் கிணற்று பகுதிக்கு வந்திருக்கலாம் என தெரிகிறது. அவருக்கு உறவினர்கள் அறிவுரை கூறினர். ஆனால் இதுபற்றி போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே விஜய் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News