கோபிசெட்டிபாளையம் அம்மா உணவகத்தில் கள்ள நோட்டு புழக்கம்- ஊழியர்கள் அதிர்ச்சி
- 10 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300 ரூபாய் வரை தங்கள் சொந்த பணத்தை போட்டுள்ளனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வசூலாகும் தொகையை மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்றும் அம்மா உணவகத்தில் வசூலான பணத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்த சென்றுள்ளனர். அப்போது பணத்தை என்னும் மெஷினில் பரிசோதிக்கும் போது 10 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தங்கள் கை காசுகளை போட்டு சமாளித்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கள்ள நோட்டு வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300 ரூபாய் வரை தங்கள் சொந்த பணத்தை போட்டுள்ளனர்.
அதிசயமும் அதே சமயம் தங்களிடம் சிக்கிய 10 ரூபாய் கள்ள நோட்டை வாடிக்கையாளர்கள் கண்ணும் படும்படி இதன் பெயர் கள்ள நோட்டு என நூல் கட்டி தொங்க விட்டுள்ளனர்.
இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறும்போது, தினமும் அம்மா உணவகத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே கள்ள நோட்டுப் புழக்கம் இருந்து வருகிறது. பொதுமக்கள் யார் மீதும் சந்தேகப்பட முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு பணம் எண்ணும் எந்திரம் இருந்தால் கள்ள நோட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றனர்.